தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 72 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். அவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி கண்டார். இந்த நிலையில் தன்னுடைய 72 வது பிறந்த இன்று கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ரவி ஆகியோர் வாழ்த்து சொன்ன நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் வாழ்த்து கூறியுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் மாண்புமிகு திரு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்தார். பாஜக மற்றும் திமுகவை பாசிசம் பாயாசம் என்று விஜய் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் வாழ்த்து சொன்னது பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழாவின்போது கூட திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து சொன்னது பரபரப்பாக பேசப்படுகிறது.