
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பெண் கல்வி, பெண் விடுதலை பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய ஜெயலலிதா பெண்களுக்காகவும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டுவந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் திமுக அரசு சீர்குலைத்து நிறுத்தி விட்டது.
திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்ற கூட திறனற்றதாக உள்ளது. பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களை கொண்டதாக இருந்தாலும் தமிழ்நாட்டில் உரிமைகளை காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாகவே உள்ளது. பொழுது விடிந்து, பொழுது போனால் தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ வேண்டும்.
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்த மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாக திகழ்கிறது. பதவிக்காகவும் பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தை காட்டிக் கொடுக்க தயாராக இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.