
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். அந்த நாளில் கட்சி தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிறந்த நாள் என்பது மற்ற நாள்களைப் போலவே அதுவும் ஒரு நாள்தான். எனது பிறந்தநாளை முன்னிட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். என் பிறந்தநாளை கொண்டாட விரும்பும் கழக தோழர்களும் அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிக்கும் கழக பணிக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
முன்பே சொன்னது போல திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் நம் திராவிடம் மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்லும் நிகழ்வுகளை நடத்துவதில் கழக தோழர்கள் முனைப்பு காட்ட வேண்டும். மேலும் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட போற்றுதலுக்குரிய நம் கழக முன்னோடிகளை நேரில் கண்டு அவர்களை உரிய வகையில் கௌரவிக்க வேண்டும் என நம் இளைஞர் அணி தோழர்களை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கவே விழி பிதுங்கிக் கொண்டிருக்கும்போது நாம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிவிட்டோம். 2026 இல் வெற்றி பெற்று முதலமைச்சர். மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை இந்த பிறந்தநாளில் என்னுடன் சேர்ந்து கழகத் தோழர்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.