
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விசாரணை நடந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டு கதவு மீது போலீசார் சம்மன் ஒட்டி சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த சம்மன் கிழிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை தாக்கியதாக கூறி வீட்டு காவலரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்மனை கிழித்த பணியாளரும் கைது செய்யப்பட்டார்.
சம்மனை கிழித்து, காவல்துறையினரை தாக்க முயற்சித்ததாக இருவர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டு பேரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சீமான் வீட்டு பாதுகாவலர் பணியாளருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. துப்பாக்கி உரிமை விதியை மீறி இருந்தால் அதனை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். தினமும் காலை 10.30 மணிக்கு பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.