
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் மூன்று கட்சிகள் தவிர பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் கலந்து கொண்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது என்பதால் 8 நாடாளுமன்ற தொகுதிகள் வரை குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பு என்பது ஒட்டு மொத்த தென்னிந்தியாவுக்கும் ஒரு அபாயகரமான விஷயம்.
இதில் நமக்குள் எந்த கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். மக்கள் தொகை மற்றும் விகிதாச்சார முறையில் கணக்கிட்டால் தமிழ்நாடு பாதிக்கப்படும். கடந்த 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகள் தான் இனியும் தொடர வேண்டும். இன்னும் 30 வருடங்களுக்கு தற்போதுள்ள எம்பிக்களின் தொகுதிகளை நீடிக்கும் என்று பிரதமர் மோடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் இன்னும் 30 வருடங்களுக்கு தற்போதுள்ள நாடாளுமன்ற தொகுதிகள் தான் நீடிக்க வேண்டுமென்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.