
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை கொலை வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜக மற்றும் தாமாக கட்சியை சேர்ந்த அஞ்சலை உட்பட சிலரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக கட்சியின் கவுன்சிலர் ஹரிதரன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலையாளிகள் கூவம் ஆற்றில் வீசிய செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஒரு கட்சியின் மாநில தலைவரின் கொலை வழக்கில் தமிழகத்தின் எதிர்க்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.