தமிழக வெற்றி கழகத்தின் தலைமைச் செயலகம் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் ஆணைக்கிணங்க அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டை முன்னிட்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியாக உதவுவதற்காக தற்போது வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு மாநாட்டினை முன்னிட்டு வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், அதனை ஒட்டிய சட்டமன்ற தொகுதிகளிலும், மாநாட்டில் கலந்துகொள்ளும் கழகத் தோழர்களுக்கும் தேவையான சட்ட ரீதியான உதவிகள் மற்றும் அறிவுரைகளை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் நிலையில் மாநாட்டில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வரை கலந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.