பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளை தொடர்ந்து, இந்தியாவில் பல பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடை பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தரின் யூடியூப் சேனலும் அடங்குகிறது என்பதுவே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தானை எதிர்த்து இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக தவறான தகவல்கள், வகுப்புவாத உணர்வுப்பூர்வமான பிரச்சாரங்கள் மற்றும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த யூடியூப் சேனல்கள்மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களில், ஷோயப் அக்தரின் சேனல், பாகிஸ்தானின் முக்கிய ஊடக நிறுவனங்களான டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார் டிவி, தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், ஜியோ நியூஸ், சாமா ஸ்போர்ட்ஸ் மற்றும் உசைர் கிரிக்கெட் ஆகியவை அடங்குகின்றன.

 

இந்த நடவடிக்கை, நாட்டின் உள்நிலையான அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானமாக பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் இந்தியா மற்றும் அதன் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பும் எந்தவொரு சேனலுக்கும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதம் நிலவுகிறது. தேசிய பாதுகாப்பை முன்னிட்டு, இந்தியா எடுத்துள்ள இந்த கடும் முடிவை பெரும்பாலான மக்கள் வரவேற்று வருகின்றனர்.