ஹைதராபாத்தில் மாதப்பூர் மற்றும் கச்சிப்போல் என்ற பகுதியில் சிறப்பு டாக்ஸ் ஃபோர்ஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 21ஆம் தேதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாதபூர் மற்றும் கச்சிப்போல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் கச்சிப்போல் பகுதியில் உள்ள வரலட்சுமி டிபன் சென்டரில் ஆய்வு நடத்திய போது அங்கு தரை வெடிப்புகள் மற்றும் உணவுப் பொருட்கள் நேரடியாக சாக்கடையில் வீசப்பட்டதால் அதனை உண்பதற்காக காகங்கள் வந்ததையும், சாக்கடையில் தண்ணீர் தேங்கிய நிலையில் சுகாதாரமற்ற மிகவும் மோசமான விளைவுகள் காணப்பட்டதாகவும் கூறினர்.

இதனையடுத்து க்ஷத்திரியா ஃபுட்ஸ் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது காய்கறி வெட்டும் இடத்தில் ஈக்கள் அதிகமாக காணப்பட்டதாகவும், அங்குள்ள சிம்னி மற்றும் உடைந்த டைல்ஸ், குளிர்சாதன பெட்டியில் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த சைவ மற்றும் அசைவ உணவுகள், ரத்தம் உறைந்த நிலையில் அசைவ உணவுகள் மற்றும் அடையாளமின்றி வைக்க வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள் பற்றியும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்.

அதோடு உணவுப் பொருள்களில் சுத்தமில்லாத செயற்கை நிறங்களை கண்டறிந்த அதிகாரிகள் அங்கு பூச்சி கட்டுப்பாட்டு அறிக்கைகள், மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் நீர் சோதனை அறிக்கைகள் ஆகியவை இல்லாததையும் உறுதி செய்துள்ளனர். மேலும் இந்த சுகாதாரமற்ற முறையில் உணவகம் நடத்தும் இந்த உணவகங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.