விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் சந்துரு (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் flipkart-ல் இருந்து பரிசு தொகை விழுந்துள்ளதாக கூறியுள்ளார். அதன்படி ரூ.12,50,000 பரிசுத்தொகை விழுந்துள்ளதாகவும், இதற்காக ஆதார் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார்.

இதை உண்மை என சந்துரு நம்பிய நிலையில் தன்னுடைய ஆதார், பான் கார்டு மற்றும் வங்கி புத்தகம் உள்ளிட்ட நகல்களை அவருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அந்த நபர் மீண்டும் சந்துருவை தொடர்பு கொண்டு பரிசு தொகையை பெற பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அவர் 5 தவணைகளாக மொத்தம் ரூ.1 லட்சத்து 800-ஐ அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து பரிசுத்தொகை வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்துரு விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.