
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பகுதியில் சங்கரலிங்கம், தேவி(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்மல்(14), இளமாறன்(13) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து அலறிய தேவியின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டதால், அந்த வாலிபர் பைக் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஏரல் அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் லிங்கராஜ்(25) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, தேவி சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரலிங்கத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் லிங்கராஜ் உடன் அவர் நெருங்கி பழகியுள்ளார். இதை சங்கரலிங்கம் பலமுறை கண்டித்துள்ளார். மேலும் இந்த தம்பதியினருகிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வாலிபர் வீட்டிற்கு வந்தபோது, தேவி இனிமேல் வரவேண்டாம் என்று கூறினார். மேலும் சில நாட்களாகவே அந்தப் பெண் லிங்கராஜ் உடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லிங்கராஜ் இந்த சம்பவத்தை செய்து உள்ளதாக காவல்துறையினர் கூறினர்.