சீனாவில் பிரபல ஆன்லைன் விளையாட்டு தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமான three Kingdom kill online என்ற விளையாட்டு சீனாவின் மூன்று பேரரசுகள் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு ஆகும்.

இந்த விளையாட்டில் 4 முதல் 8 வீரர்கள் பங்கேற்க முடியும். ஒவ்வொரு சுற்றும் 10 முதல் 30 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. இந்த விளையாட்டை கணினியில் எதுவும் பதிவிறக்கம் செய்து விளையாடத் தேவையில்லை. நேரடியாக இணையதள உலாவில் விளையாடக்கூடிய விளையாட்டு.

இந்த விளையாட்டு சீனாவில் மிகுந்த புகழ்பெற்ற விளையாட்டுகளில் ஒன்றாகும். ஆனால் தற்போது கடந்த 15 ஆண்டுகளாக அந்த விளையாட்டை விளையாடி வந்த qiaoben என்ற ஆன்லைன் விளையாட்டு வீரர் இந்த போட்டி தனக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கேமிங் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தனது மன அழுத்தத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கில், அந்த கேமிங் விளையாட்டில் ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் மற்ற போட்டியாளர்கள் அவரது புதிய விளையாட்டு அவதாரத்தின் மீது முட்டை, சணல் செருப்புகள் வீசி இழிவுபடுத்துவதாகவும், மேலும் இதுவரை 4800 முறை தனது விளையாட்டு அவதாரத்தை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறியுள்ளார்.

தான் ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போதும் எதிர் போட்டியாளர்கள் தனது வெற்றியை அவமானப்படுத்துவது தனக்கு மிக மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என அவர் தெரிவித்து இருந்தார்.இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுக்கள் மக்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படுத்துகிறதா என கேள்வி எழுப்பியுள்ளது.