திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள மாதனூர் பகுதியில் வசித்து வரும் யோகராஜ் என்பவருக்கு தர்ஷன்(4), யோகித்(6) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் யோகராஜ் நண்பரான வசந்த் என்பவர் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி வெளியே சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் யோகராஜ் வசந்தன் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவரது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த யோகராஜ் உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேலூர் மாவட்டம் சிங்கல்பாடி பகுதியில் உள்ள செங்காத்தம்மன் கோவிலில் பின்புறம் தர்ஷன் மற்றும் யோகித் உயிரிழந்து காணப்பட்டனர். இது குறித்த தகவல் அறிந்த ஆம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து குழந்தைகளை வெளியே அழைத்து சென்ற வசந்த் என்பவரை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மை வெளியானது.

அந்த விசாரணையில் யோகராஜ் வசந்திடம் 14000 ரூபாய் கடனாக வாங்கியதும் அதனை திருப்பி கொடுக்காமலும் இருந்துள்ளார். இதனால் வசந்த்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வசந்த் யோகராஜின் மகன்களை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.