கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் தனியார் தொழிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் 6 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் எஸ்டேட்டிற்கு வந்தனர். அவர்கள் சக்தி எஸ்டேட் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் தொழிலாளர்கள் நடந்து சென்ற போது காட்டு யானைகள் கூட்டமாக நின்றதை கண்டு அச்சமடைந்தனர்.

இதனால் அவரகள் சக்தி எஸ்டேட் பகுதியிலேயே தங்கி விட்டு நேற்று காலை 7 மணிக்கு மீண்டும் தங்களது எஸ்டேட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த இரண்டு காட்டு யானைகள் தொழிலாளர்களை துரத்தியது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது அமராவதி(47) என்பவர் யானை தாக்கியதால் படுகாயம் அடைந்தார். பிறகு காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

உடனடியாக எஸ்டேட் நிர்வாகத்தினரும், சக தொழிலாளர்களும் அமராவதியை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக எஸ்டேட் பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.