
சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (58). இவர் சவுகார்பேட்டையில் நகை கடை மற்றும் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஓய்வு பெற்ற ஐஜின் மகன் மைக்கேல் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இரண்டு யானை தந்தங்களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.
இதனை அடுத்து பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் அடமானம் வைக்கப்பட்ட யானை தந்தத்தை மீட்காமல் இருந்துள்ளார். இதனால் பிரபாகரன் 2 யானை தந்தங்களையும் தரகர்கள் மூலம் வெளியில் விற்க முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன் பேரில் யானை தந்தங்களை வாங்கும் கடத்தல்காரர்கள் போல் சுங்க அதிகாரிகள் நடித்து போர்டு கிளப்பில் உள்ள தரகர் ஒருவர் மூலமாக தந்தத்தை அடகு வைத்த ஐஜி மகனை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதன் மூலம் நகை கடை உரிமையாளர் பிரபாகரனை அணுகியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த யானை தந்தங்கள் ரூபாய் 50 லட்சம் விலைக்கு பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கேகே நகரில் உள்ள ஒரு தனியார் காம்ப்ளக்ஸில் பிரபாகரன் யானை தந்தத்தை விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார். அதனை கடத்தல்காரர்கள் போல் நடித்த சுங்க அதிகாரிகள் வாங்குவது போல் சென்று பிரபாகரனை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அதன்பின் அவரிடம் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்கள் மீட்கப்பட்டன. இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட அடகு கடை உரிமையாளர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் திவாகர் (40), தரகர்களாக இருந்த சுரேஷ்(40), செல்வகுமார்(38), ஆனந்த்(56), குரு பிரசாத்(39), சுரேஷ்பாபு(45) ஆகிய 7 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். மேலும் 2 யானை தந்தங்களையும் வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.