மும்பையில் உள்ள கிழக்கு புறநகர் பகுதியில் சுனாபட்டி ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில், பயணித்த பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அவரது ஆடை மற்றொரு பயணியின் பையில் சிக்கி உள்ளது. அதோடு ரயில் வேகம் எடுத்த போது, அந்த பெண் சமநிலை இழந்து நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் காவலர் ரூபாலி என்பவர் ஓடிச் சென்று ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை சக்கரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் பிடித்து இழுத்தார். அப்போது இருவரும் நடைமேடையில் விழுந்தனர். உடனே அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் இருவரையும் மீட்டனர். இந்த சம்பவத்தில் இருவருக்கும் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பெண் காவலர் சரியான நேரத்தில் அந்தப் பெண்ணை காப்பாற்றிய சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.