சத்தீஷ்கர் மாநிலத்தில் அம்மாநில கலால் துறை புதியதாக மது விரும்பிகளுக்காக புதிய செயலி ஒன்றை தொடங்கியுள்ளது. தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க விஷ்ணு தியோ சாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த புதிய செயலியின் பெயர் “மன்பசந்த்” என பெயரிட்டுள்ளனர். இந்த செயலி மூலம் மதுக்கடைகள் குறித்த தகவல்கள், அங்கு கையிருப்பு உள்ள மது வகைகள் விவரங்கள், விலைப்பட்டியல்கள், மது அருந்துவோர் விரும்பும் மது கம்பெனிகள் அடங்கிய பட்டியல் ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். மது அருந்துவோர் தாங்கள் விரும்பும் மதுக்களை இந்த செயலி மூலம் தேர்ந்தெடுத்து கலால் துறைக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மதுக்கடைகள் பற்றிய புகார்களையும் இதில் தெரிவிக்கலாம். இதற்கிடையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியினார், ஆளும் பாஜக கட்சியினரை குறித்த கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து முன்னாள் முதல் மந்திரி பூபேஷ் பாபல் தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பாஜக கட்சியினர் “சத்தீஸ்கரை வளமானதாக மாற்றுவோம்” என வீர முழக்கமிட்டனர்.தற்போது மது கடைகளை ஊக்குவித்து, பள்ளிகளை மூடி வருகின்றனர். மேலும் மதுவுக்கு பலரையும் அடிமையாக்கி வருகின்றனர். குறிப்பிட்ட மதுவை தேர்ந்தெடுத்து குடிப்பதற்கு வழிவகை செய்து வருகின்றனர்.