தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்து வரும் 24-ஆம் தேதி சென்னையில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 6 வயது சிறுமி முதல் 60 வயது பெண் வரை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக மகளிர் அணி சார்பில் வரும் 24-ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இந்த போராட்டத்தில் தமிழக மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றும் இபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.