
தாய்லாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கும் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து நாடாளுமன்றத்தில் இம்மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட பின்பு , அந்நாட்டின் மன்னரும் மசோதாவுக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் முதல் தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் தாய்லாந்து, தைவான் மற்றும் நேபாள் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் மூன்றாவது நாடு என்ற பெருமையைப் பெறுகிறது.
இந்த முடிவு, தாய்லாந்தில் LGBTQ+ சமூகத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, சமூக சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆசியாவின் மற்ற நாடுகளுக்கும் ஒரு முன்னோடியாக அமைந்து, அங்குள்ள LGBTQ+ சமூகத்தினருக்கு நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.