
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மார்ச் 14ஆம் தேதி ஹோலி பண்டிகையன்று தனது நாய்க்கு உணவளிப்பதற்காக அதனருகில் சென்றார். அப்போது திடீரென அந்த நாய் வெறி பிடித்து மோகினியை கடித்தது.
இதில் அவருக்கு உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இந்த நாயினால் அந்த மூதாட்டியின் பேரன் மற்றும் மருமகளும் ஏற்கனவே காயமடைந்துள்ளனர் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி மாநகராட்சி நிர்வாகத்தினர் வந்து சம்பந்தப்பட்ட நாயை பிடித்து சென்றனர்.
தற்போது மோகினியின் பேரன் திரு பிரசாத் த்ரிவேதி கான்பூர் மாநகராட்சியிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் “நாங்கள் உணவு, உறக்கம் இல்லாமல் தவிக்கிறோம், தயவு செய்து நாயை திருப்பிக் கொடுங்கள், எதுவானாலும் நான் முழு பொறுப்பேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதற்கு மிருக பராமரிப்பு துறை தலைவர் டாக்டர் ஆர் கே நிரஞ்சன் நாயின் நடத்தை மிகவும் ஆபத்தாக உள்ளதால் குடியிருப்பு பகுதிக்கு மீண்டும் அனுப்புவது பாதுகாப்பாக இருக்கும் என உறுதியாக சொல்ல முடியாது என்று தெரிவித்தார். அதோடு நாயின் நடத்தையை தொடர்ந்து கண்காணித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் நாயின் தாக்குதலால் அப்பகுதி மக்கள் அதிக பயத்துடன் இருக்கிறார்கள்.