
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, கரையான் சாவடி பகுதியில் ஜெசி என்பவர் வசித்த வருகின்றார். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நான் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்டியன் மேட்டர் மோனியில் பதிவு செய்திருந்தேன். அப்போது கோவை பகுதியை சேர்ந்த லெனின் மோகன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் ஆசை வார்த்தைகள் கூறி செல்போனில் பழகி வந்தார். மேலும் அவருக்கு பணம் தேவைப்படும் போது அடிக்கடி என்னிடம் பணம் வாங்கி உள்ளார். இதுவரை நான் அவருக்கு சுமார் 5 லட்சம் வரை கொடுத்துள்ளேன். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வருகின்றார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் கூடுதல் ஆணையர் அர்னால்ட் ஆகியோரின் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் பிரவீன் குமார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த லெனின் மோகன் என்பவரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதில் மதுபான விடுதிக்கு செல்லவும், பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கவும் பணம் தேவைப்பட்டதால் மேட்ரிமோனி வலைதளங்களில் பதிவு செய்துள்ள விதவை மற்றும் விவாகரத்தான பெண்களிடம் பேசி பழகி பணம் பெற்று மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பதை தெரியவந்தது. அந்த வரிசையில் ஜெசியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்து ஏமாற்றி வந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். எனவே காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்து 2 செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.