
தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று சென்னை மாமல்லபுரம் ஈசிஆரில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்ட்டில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்கள். அதன் பிறகு சில முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட இருக்கிறார். இந்த நிலையில் ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக ஆண்டு விழா நடைபெறும் இடங்களில் பேனர்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் GET OUT என்ற ஹேஷ்டேக்குடன் வைக்கப்பட்டுள்ள பேனர் கவனம் ஈர்த்துள்ளது. அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிரான வாசகங்கள் பேனர்களில் இருக்கிறது. குறிப்பாக ஒருவர் தாளம் அடிக்க அந்த தாளத்திற்கு ஏற்ப ஒருவர் நடனமாட தமிழக மக்களின் பிரச்சனையை இருட்டடிப்பு செய்து அதனை திசை திருப்ப என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வது போன்று இருக்கிறது. அதன் பிறகு பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் நிலையில் அவர்களின் பெருந்துயரை கண்டும் காணாமலும் அரசு செயல்படுகிறது. சாமானியர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசியல் நோக்கோடு ஊக்குவிக்கிறார்கள் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு தற்போது விஜய் வந்துள்ள நிலையில் அவரை புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதைத்தொடர்ந்து முதல் கையெழுத்தை நடிகர் விஜய் போட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.