எகிப்தில் டான்டா நகரில் நடைபெற்ற ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியில் திடீரென புலி தாக்கியதால் வாலிபர் கையை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எகிப்தில் அமைந்துள்ள டான்டா நகரில் ரம்ஜான் பெருநாளின் 2வது நாளில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் புலிகளை கொண்டு சாகசம் செய்து அனோசா என்பவர் பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பார்வையாளராக நின்று கொண்டிருந்த முகமது(23) என்ற இளைஞர் பாதுகாப்பு கம்பியை தாண்டி நின்று கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த வெள்ளை புலி ஒன்று அவரை திடீரென தாக்கியது. தன்னுடைய கூர்மையான பற்களால் அவரது கையை கடித்த நிலையில் வாலிபர் வலியில் துடித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் குச்சியை கொண்டு அடித்து புலியை கட்டுப்படுத்த முயன்றனர்.

சிலர் பின்புறத்தில் இருந்து புலியை விரட்ட முயன்ற நிலையிலும் புலி அவரது கையை விடாமல் கடித்துக்கொண்டே இருந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து கையை அகற்றினர். பாதிக்கப்பட்ட இளைஞர் “என் வாழ்க்கை இனிமேல் மாறிவிடும்….. என் கையை இழந்தேன்….. எனக்கு என் உரிமை வேண்டும்….”என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் இது போன்ற பயங்கரமான சம்பவம் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு உத்திகளை குறித்து புதிய கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.