திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பூமாலைகள் தொடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இங்கு ஆர்டரின் பெயரில் பக்கத்து ஊர்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் பூ மாலைகள் தொடுத்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் பழைய காமன்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த சிலரை சந்தித்தார்.

அவர்கள் சுடலைமாடன் சுவாமி கோவிலில் நடைபெற உள்ள ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு படைக்க பாதாம் பருப்பு, பிஸ்தா, உலர் திராட்சை, முந்திரிப்பருப்பு, செரி பழம் ஆகிவற்றால் மாலைகள் தொடுத்து தர வேண்டும் என ஆர்டர் செய்தனர். அதன்படி செல்வகுமார் மேற்கூறிய பொருட்களை பயன்படுத்தி 8 அடி நீள மாலை இரண்டும், நான்கு அடி நீள மாலை ஒன்றும் என மூன்று மாலைகளை தயார் செய்துள்ளார். அவை 350 கிலோ எடை உடையது.

அவரது கடை முன்பு தொங்க விடப்பட்டுள்ள மாலைகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அந்த மாலைகள் தோவாளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது, திருவிழா காலங்களில் பூமாலைகள் தொடுக்க அதிக ஆர்டர்கள் வரும். தோவாளையை சேர்ந்த கோவில் நிர்வாகிகள் வித்தியாசமாக பிஸ்தா, பாதம் உள்ளிட்ட பொருட்களில் மாலைகளை தொடுத்து தர வேண்டும் என கேட்டனர். அவர்கள் கூறியபடி பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி 350 கிலோ எடையில் மாலையை தொடுத்துள்ளேன். இதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவானது என கூறினார்.