சேலம் அழகாபுரம் பகுதியில் பள்ளி மாணவியை மது கலந்த குளிர்பானம் கொடுத்து மயக்கத்தில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், சாலையோரம் மயங்கி கிடந்ததை பொதுமக்கள் கண்டடைந்தனர். உடனடியாக அவரை காவல் துறையினரின் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் அதிக அளவில் மது கலந்த குளிர்பானம் அருந்தியதை உறுதிப்படுத்தியதையடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் கோவிந்தசாமி (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கோவிந்தசாமி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மது கலந்த குளிர்பானத்தை அவருக்கு கொடுத்து குடிக்க வைத்துள்ளார். போதை தலைக்கு ஏறிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பயந்துவிட்ட கோவிந்தசாமி, மாணவியை மீண்டும் சாலையோரம் விட்டுச் சென்றுள்ளார்.