
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த மகேஷ் குமார் கடந்த மாதம் 13-ஆம் தேதி இவர் தனது குடும்பத்தினருடன் மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது மகேஷ் குமாரின் குழந்தையின் காலில் அணிந்து இருந்த ஒரு சவரன் கொலுசு மாயமாகியிருந்தது. இதனால் பதறிப்போன மகேஷ் குமார் உடனே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மகேஷ் குமாரின் குழந்தையிடம் பெண் ஒருவர் பேச்சு கொடுத்து கொலுசுவை திருடியது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர் கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த கலைவாணி என்பது தெரிய வந்தது. இவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கொண்டு கபாலீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் வரும் குழந்தைகளை மட்டும் குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் கலைவாணியை கைது செய்து அவரிடமிருந்து ஒரு சவரன் தங்க கொலுசுவை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.