
சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெலிவரி செய்கின்றனர். அவர்கள் மழை, வெயில் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் கூட உணவு டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இவர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள். இவர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.
மேலும் ஓய்வெடுக்க இடமில்லை. சாலை ஓரங்களில் கூடுகிறார்கள். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையின் முக்கிய சாலைகளில் ஏசி ஓய்வறையை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மாநகர ஆணையர் குமரகுருபன் தெரிவித்துள்ளார். 60 சதுர அடி பரப்பளவில் அமையக்கூடிய இந்த ஓய்வறைவில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் அடிப்படையில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி நகர் போன்ற பகுதிகளில் ஏசி ஓய்வு அறைகள் அமைக்கப்பட உள்ளன.