மராட்டியத்தின் மும்பை நகரில் பிரபல கூகுள் நிறுவனத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அப்போது பேசிய நபர், புனே நகரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த அலுவலகம் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. அதன்பின் காவல் துணை ஆணையாளர் விக்ராந்த் தேஷ்முக் தலைமையிலான காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

புனே நகரின் முந்த்வா பகுதியில் பன்னடுக்கு வர்த்தக கட்டிடத்தின் 11வது மாடியிலிருந்த அந்த அலுவலகத்தின் வளாக பகுதியில் வெடி குண்டு இருக்கிறது என அழைப்பு வந்ததாக தேஷ்முக் கூறினார். அதனைதொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும் நீண்ட நேரம் தேடிய பிறகும் எதுவும் கிடைக்கவில்லை.

வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. பின் வெடிகுண்டு குறித்த தகவலை தெரிவித்த நபரின் இருப்பிடம் பற்றி காவல்துறையினர் ஆராய்ந்தபோது, அவர் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் மது போதையில் உளறி உள்ளார் என தெரிந்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.