
அதிமுகவின் துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் மதுரை மாநாட்டில் பேசியபோது, நம் கழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்றால் ? அதற்கு பின்பு ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. செல்லூர் ராஜு அவர்கள் சொன்னார் அம்மா தலைமையிலே மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பிறகு இங்க ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டது.
அதேபோல திருநெல்வேலியில் நடந்த அந்த மாநாட்டிற்கு பின்பும், வெற்றி மாநாட்டிற்கு பின்பு இங்கே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றார்கள். அதேபோல இந்த மாநாட்டிற்கு பின்பு ஆட்சி மாற்றம் ஏற்படும். அருமை அண்ணன் எடப்பாடியார் தலைமையில் இந்த விடியா அரசுக்கு முடிவு கட்டப்படும் என்பதை தெரிவித்து ஒன்றை மட்டும் தெரிவிக்கிறேன்.
ஆகஸ்ட்லே ஒரு சரித்திரம் நிகழும் என்று சொல்கிறேன். ஆகஸ்ட் புரட்சி என்று நீங்கள் எல்லாரும் அறிவீர்கள். அந்த ஆகஸ்ட் புரட்சியில்தான் ”வெள்ளையனே வெளியேறு” என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றது. அதேபோல ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறுகின்ற இந்த மாநாட்டிற்கு பின்பு ”கொள்ளையனே வெளியேறு” கோபாலபுரத்துக் ”கொள்ளையனே வெளியேறு” என்ற கோஷத்தை முன்வைத்து நிச்சயமாக அந்த கோஷம் வெற்றி பெறும். அருமை அண்ணன் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சர் ஆக அமர்வது உறுதி.
அண்ணா சொன்னதை மட்டும் நினைவில் வையுங்கள்… மிக பிரம்மாண்டமாக லட்சக்கணக்கான பல லட்சம் பேர் திரண்டு இருக்கிறீர்கள். இவ்வளவு பேர் திரண்டு இருந்தாலும், நாம் கூடி கலையும் கூட்டம் அல்ல. கூடி பொழியும் மேகக் கூட்டம் என்று அண்ணா சொன்னார்கள். அதை நிரூபிக்கின்ற வகையில் நாம் அனைவரும் கூடி பொழிகின்ற மேகக் கூட்டங்களாக இருந்து, அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சர் ஆக அரியணையில் அமரும் வரை நாம் ஓயமாட்டோம், உறங்க மாட்டோம் என்று சொல்லி சூளுரை ஏற்று பணியாற்றுவோம் என பேசினார்.