
தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காயத்ரி ரகுராம் பாஜக கட்சியிலிருந்து விலகிய நிலையில் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இப்படி பாஜகவில் அடுத்தடுத்து பூகம்பங்கள் வெடிக்கும் நிலையில் பாஜகவை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஆளுநர் ரவியை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார். அதோடு ஆளுநரின் பேச்சும் கருத்தும் அப்படித்தான் இருக்கிறது. பாஜக அதிமுகவை ஏதோ செய்ய நினைக்கிறது. இருப்பினும் அதிமுக குறித்த சர்ச்சை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தெளிவாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு எதிராக தான் சுமத்தும் குற்றங்களுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறிவரும் நிலையில், அந்த ஆதாரங்களை அவர் பாஜக மேல் இடத்திற்கு அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. அதோடு அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விரைவில் நீக்கலாம் என்ற கருத்துக்களும் அடிக்கடி வெளிவரும் நிலையில், தற்போது திருநாவுக்கரசரும் அண்ணாமலைக்கு பதில் ஆளுநர் ரவியை பாஜக மாநில தலைவராக நியமிக்க போகிறார்கள் என்று சொன்னது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.