பெலிஸ் கடற்கரைக்கு அருகே உள்ள Great Blue Hole எனப்படும் கடல் கீழ் குழி, உலகின் ஆழமான மற்றும் மர்மமான இயற்கை அமைப்புகளில் ஒன்றாகும். இந்தக் குழியின் ஆழம் சுமார் 410 அடி ஆகும். இது பனிக்கால முடிவில் ஏற்பட்டதும், தற்போது ஒரு புகழ்பெற்ற டைவிங் தளமாக மாறியிருப்பதாலும் உலகம் முழுவதிலிருந்தும் ஆர்வலர்களை ஈர்க்கிறது. ஆனால், சிலர் குழிக்குள் நுழைந்த பின் திரும்பி வராத கதைகளும் உண்டு. இந்த குழியின் அடிப்பகுதியில் சிதைந்த பொருட்கள் மற்றும் இரண்டு டைவர்களின் சடலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது, ஆனால் அந்த உடல்கள் மீட்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களால் அவற்றை அங்கு விடுவதாக முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் இந்த குழியின் அடியில் இருந்து மாதிரிகளை எடுத்துப் பரிசோதித்தனர். இதன் மூலம், கடந்த 5,700 ஆண்டுகளில் புயல்களின் வரலாறு பதிவாகியுள்ளதை கண்டறிந்தனர். அதில் குறிப்பிடத்தக்க விஷயம், கடந்த 20 ஆண்டுகளில் புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்துள்ளது என்பதாகும். இது இயற்கை காரணங்களுடன் சேர்ந்து, மனிதநேய சூழலியல் மாற்றங்களால் ஏற்பட்ட உலக வெப்பத்தின் தாக்கமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வின் முதன்மை எழுத்தாளர் டொமினிக் ஷ்மிட் கூறியதாவது, கடந்த 6,000 ஆண்டுகளில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் சராசரியாக 4 முதல் 16 புயல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 9 புயல்கள் ஏற்பட்டுள்ளன என்பது பயங்கர மாற்றம். இது சமீபத்திய காலநிலை மாற்றத்தின் தாக்கமாகும். கடல் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக புயல்களின் அளவிலும், தாக்கத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். “நாம் இயற்கையை அழிக்கிறோம் என்றால், இயற்கை நம்மை அழித்துவிடும்” என்ற  உண்மை இதன் மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது.