
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் மூன்று சாதாரண தொழிலாளர்களுக்கு வருமானவரி துறையினால் கோடிக்கணக்கான பணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய தொழிலாளியான யோகேஷ் சர்மா, தனது மனைவி காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் மின்சாரம் இணைப்பு இல்லாமல் சில நாட்களாக இருட்டில் வாழ்ந்து வருகிறார்.
ஆனால், மார்ச் 20 அன்று வருமானவரி துறையிடமிருந்து வந்த நோட்டீசில், அவரிடம் ரூ.11.12 கோடி வரி நிலுவையுள்ளதாக கூறப்பட்டுள்ளது. “என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தொகையை பார்த்ததே இல்லை,” என அவர் கவலையுடன் கூறியுள்ளார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நபரான கரண் குமார், ஒரு வங்கியில் சுத்தம் செய்யும் பணியில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
இவருக்கும் வருமானவரி துறையிடமிருந்து ரூ.33.89 கோடி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது ஆதார் மற்றும் பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளார். தற்போது போலீசில் புகார் அளித்து விசாரணை கோரியுள்ளார். மூன்றாவது நபர் முகமது ரயீஸ், ஒரு ஜூஸ் கடையை நடத்தி வருபவர். அவருக்கும் சமீபத்தில் ரூ.7.79 கோடி வருமானவரி நோட்டீஸ் வந்துள்ளது.
“நான் ஜூஸ் விற்பவர் தான். இவ்வளவு பெரிய தொகையை பார்த்ததே இல்ல. என்ன செய்வது?” எனக் கூறியுள்ளார். அவரது நண்பர் சொஹைல், “ரயீஸ் கோடீஸ்வரராக இருந்தால் ஜூஸ் கடை நடத்துவாரா? இது ஒரு மோசடியேதான்” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள், ஆதார் மற்றும் பான் விவரங்கள் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசும் வருமானவரி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.