நடப்பு ஆண்டு இஸ்லாமியா்களின் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னை உட்பட 25 விமான நிலையங்கள் சோ்க்கப்பட்டு இருக்கிறது.

நடப்பு ஆண்டு ஹஜ் பயணத்திற்கான திட்டத்தை மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80% ஹஜ் கமிட்டிகளுக்கும், 20% தனியாா் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும். முன்பே ஹஜ் கமிட்டி வாயிலாக பயணம் மேற்கொண்டவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது. ஹஜ் பயணத்துக்கான ரூபாய்.300 மதிப்பிலான விண்ணப்பம் நடப்பு ஆண்டு இலவசமாக வழங்கப்படும். இதனை ஹஜ் கமிட்டி இணையதளம் (அ) ஆண்ட்ராய்டு செயலி வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். இதையடுத்து தோ்வு செய்யப்பட்டவா்களிடம் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

பயணிகளின் திட்டசெலவு மதிப்பீட்டில் ரூபாய்.50 ஆயிரம் வரை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 45 வயதுக்கு அதிகமான பெண் பயணிகளுக்கு ஆண் துணை (மெஹரம் ) செல்பவா் இல்லை என்றாலும் அவா்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்பின் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் (அ) உறவினா்கள் செல்வதாக இருந்தால் ஒரே தொகுப்பாக விண்ணப்பிக்கலாம். பயணிகள் உடல்நல மற்றும் ஆா்டிபிசிஆா் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அப்பரிசோதனைகளை மத்திய அரசின் மருத்துவமனைகளில் மேற்கொள்ளலாம். ஹஜ் பயணிகளுக்கு அருகில் உள்ள விமான நிலையங்களிலிருந்து புறப்பட இடம் ஒதுக்கப்படும்.

சென்னை, கண்ணூா், கொச்சி, விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, ஆமதாபாத், லக்னெள, அகா்தலா, காலிகட், கொல்கத்தா, மும்பை, தில்லி, நாகபுரி, ஜெய்ப்பூா், வாராணசி, ஒளரங்காபாத், கோவா, மங்களூா், போபால், இந்தூா், குவாஹாட்டி, கயை, ராஞ்சி, ஸ்ரீநகா் உள்ளிட்ட 25 விமான நிலையங்களிலிருத்து பயணிகள் புறப்படலாம். அனைத்து மாநிலங்களிலிருந்து இயக்குநா் அளவிலான அதிகாரி ஹஜ் பயணிகளின் உதவிக்காக போகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்ற வருடம் கொரோனா பரவல் காரணமாக சென்னை நீங்கலாக 10 விமான நிலையங்களில் இருந்து மட்டும் ஹஜ் பயணம் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.