நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதில் இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை நீடிக்கின்றது. நேற்று காலையில் இருந்து மாலை 6 மணி வரை பெரிய அளவில் மழை எதுவும் இல்லாத நிலையில் இரவு 8 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை குறிப்பாக குன்னூரில் மட்டும் 11 செ.மீ கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியது. மேலும் அப்பகுதியில் சுமார் 25 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு ஒட்டுமொத்த பகுதிகளும் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதே போல் மேல் பாரதி நகர், காந்திபுரம், சித்தி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 30- க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும் பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு சுவர் இடிந்ததால் அங்குள்ள குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு குடியிருந்த மக்கள உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கனமழையால் சாலையோரங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்வதால் ஏற்படும் பாதிப்புகளை வருவாய் நெடுஞ்சாலை மற்றும் போலீசார் அகற்றி வருகின்றனர். மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த குழந்தைகள் உட்பட 9 பேர் வெஸ்டலி சர்ச்சில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு குன்னூர், மேல் பாரதி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட 8 பேர் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குன்னூர் தாலுகாவில் பொதுமக்களுக்காக 150 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாரிக்க உள்ளதாகவும் தாசில்தார் தெரிவித்துள்ளார். அதோடு குன்னூர் பகுதியில் தொடர்ந்து மேகமூட்டத்துடன் சாரல் மழை நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.