மும்பையில் நேற்று மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் ஆர் எஸ் எஸ் இணைப்பு பொதுச்செயலாளர் அருண்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தற்போது நடைபெற்று வரும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அதில் வணிகத்தை நடத்த வேண்டும். இந்தியாவில் எந்த பிராந்திய மொழியும் கிடையாது. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான். நமக்கு ஒரு நிர்வாக அமைப்பு உள்ளது. ஒரு பொதுவான தேசிய மொழி தேவைப்படுகிறது. அது சமஸ்கிருதம், ஆனால் இன்று அது சாத்தியம் கிடையாது. எனவே அது இன்று இந்தியாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் இந்தியை விரும்பவில்லை என்றால் உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்க வேண்டும்.

ஆங்கிலம் பொதுவான தேசிய மொழியாக இருக்க முடியாது. அது ஒரு வெளிநாட்டு மொழியாகும். அதை பொதுவான தேசிய மொழியாக மாற்றினால், மாநில மொழிகள் இருப்பு ஆபத்தில் இருக்கும் என்று தலைவர் கோல்வால்கர் கூறியுள்ளார். இந்தி மொழி படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக வேண்டும். அதற்கான செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும், நீங்கள் கட்டாயப்படுத்தினால் எதிர்வினை இருக்கும். சுயநலத்திற்காக இந்தியை எதிர்ப்பவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. தமிழ்நாட்டில் நிறைய மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள். எனவே அந்த விஷயத்தில் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.