
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்ல இருக்கிறார். ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 நாட்களாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் அமித்ஷா இந்தியா சீனா எல்லையில் அமைந்துள்ள கிபிதூ என்ற கிராமத்தில் அதிர்வு மிக்க கிராமங்கள் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் மோடி தலைமையின் கீழ் 2022-23 மற்றும் 2025 ஆம் நிதியாண்டுகளில் 2500 கோடி சாலை இணைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 4,800 கோடி மதிப்பில் அதிர்வு மிக்க கிராமங்கள் என்ற திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்வு மிக்க கிராமங்கள் திட்டத்தின் மூலம் லடாக் யூனியன் பிரதேசம், இமாச்சல் பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள 2,976 கிராமங்களில் குடிநீர் வசதி, சாலை இணைப்பு வசதி, மின்சார வசதி, சுற்றுலா மையங்கள் இணைய வசதி, பல்நோக்கு மையங்கள், சுகாதார உள்கட்டமைப்பு வசதி, ஆரோக்கிய மையங்கள் போன்றவைகள் அமைக்கப்பட்டு கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறாத அளவுக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 10-ம் தேதி இந்தியா சீனா எல்லையில் அமைந்துள்ள கிபிதூ கிராமத்தில் பொன்விழா எல்லை வெளிச்சத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மாநில அரசின் ஒன்பது மைக்ரோ ஹைடல் திட்டங்களை திறந்து வைக்க இருக்கிறார்.