
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் குக்கீஸ் சாலை கார்டன் மெயின் தெருவில் அபிஷேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் அபிஷேக் ஹோட்டல் லிப்ட்டில் ட்ராலி மூலம் பொருட்களை ஏற்றிக்கொண்டு 16-வது மாடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லிப்டின் கதவுகள் சரியாக மூடாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் 9-வது மாடிக்கு சென்ற போது திடீரென லிப்ட் கீழ் நோக்கி வர தொடங்கியதால் நிலைதடுமாறி அபிஷேக் லிப்ட்க்கும் வெளிப்புற கதவுக்கும் இடையே விழுந்து உடல் துண்டாகி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லிப்ட்டை உடைத்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அபிஷேக்கின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.