திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் நிட்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மொதிர் ரகுமான்(37), அவருடைய மனைவி அஞ்சனா அக்தர் (37) ஆகிய இருவரும் வங்காளதேசம் டாக்கா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி நிட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி இருந்து பணியாற்றி வந்துள்ளனர். முறையான ஆவணங்கள் இன்றி மேற்குவங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்கு வந்து திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.