
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் நிகழ்ந்த சோகம் ஒன்றில், ஆன்லைன் ரம்மி அடிமையால் குடும்பம் முற்றிலும் சீரழிந்தது. அந்தப் பகுதியில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரி மதன் என்பவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆனால், மதன் ஆன்லைன் ரம்மியில் அடிமையாகி, வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த வெண்ணிலா, மதனுக்கு பலமுறை எச்சரித்தும், காவல்நிலையத்தில் புகார் அளித்தும் மாற்றம் இல்லாத நிலையில், இன்று வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அம்பலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.