
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. இவர் ஒரு கான்கிரீட் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். பழனி தனது அத்தை மகளான செல்வியை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் அவரது மனைவி இறந்துள்ளார்.
மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் வீட்டில் தனது மனைவிக்கு என தனியாக ஒரு அறை அமைத்து அதில் படுக்கையறை போன்று வடிவமைத்து ஏசி போன்ற அனைத்து வசதிகளும் செய்து சமாதி ஒன்றை எழுப்பியுள்ளார். இது குறித்து பழனி கூறியதாவது, தனது மனைவிக்கு வீடு எப்பொழுதும் குளுமையாக இருக்க வேண்டும் எனவும், வீட்டிற்கு யார் வந்தாலும் ஹாலில் நின்று பேசுவது மனைவிக்கு கேட்கும் வகையிலும் அந்த அறையை வடிவமைத்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் உறுதுணையாக நின்ற என் மனைவி யார் வீட்டிற்கு வந்தாலும் முதலில் உணவு அளித்து உபசரித்து விட்டு அடுத்த வேலை செய்வார். அவருக்கு ஆன்மீகத்தில் அதிக ஆர்வம். தன்னை எப்பொழுதும் பொறுமையாக புரிந்து கொண்டு தனக்கு உறுதுணையாக வாழ்க்கை முழுவதும் இருந்தவர். என உணர்ச்சிவசத்தோடு பழனி கூறினார். இவரது காதல் உணர்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.