திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் இளைஞர் ஒருவர் நீச்சல் அடித்துள்ளார். இதனை கவனித்த படகு ஓட்டுனர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவரை வெளியே வருமாறு கூச்சலிட்டுள்ளனர். இதனால் ஏரியை விட்டு வெளியே வந்த இளைஞர் அங்கிருந்தவர்களிடம் தகராறில்  ஈடுபட்டுள்ளார். அவரை ஏரியிலிருந்து காப்பாற்ற வந்த சிலரிடம் “நானும் மதுரைக்காரன் தான் டா” என போதையில் உளறியுள்ளார்.

இதனை அறிந்த சுற்றுலாப் பயணிகள் அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரை விசாரித்துள்ளனர். அப்போது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞருக்கு டீக்கடையில் டீ வாங்கிக் கொடுத்து போதையை தெளிய வைத்து அறிவுரை கூறி சொந்த ஊருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். போதையில் வாலிபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.