
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவருடைய நடிப்பில் உருவான “விஷ்வம்பரா” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இயக்குனர் அனில் ரவிபுடி, ஸ்ரீகாந்த் ஒடேலா ஆகியோரது இயக்கத்தில் சிரஞ்சீவி விரைவில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிலேயே பிரபல இயக்குனராக கருதப்படுபவர் எஸ் எஸ் ராஜமௌலி. இவர் பாகுபலி, ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காக பல நடிகர்கள் ஆர்வத்தோடு இருக்கும் நிலையில் நடிகர் சிரஞ்சீவி மட்டும் ஆர்வம் காட்டாமல் இருப்பது பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளார்.
அதாவது “இயக்குனர் ராஜமௌலி ஒரு படத்தை எடுப்பதற்கு 3 முதல் 4 வருடங்கள் ஆகிறது. அவ்வளவு காலம் என்னால் ஒரே படத்தில் நடிக்க முடியாது என்பதால் தான் நான் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை, அவர் ஒரு படத்தை இயக்குவதற்குள் நான் 4 படங்களில் நடித்து முடித்து விடுவேன் என்று கூறினார்.
அதோடு அவருடைய படத்தின் மூலம் நான் ஒரு அகில இந்திய நட்சத்திரமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் ராஜமௌலி நடிகர் மகேஷ்பாபு மற்றும் பிருத்திவிராஜ் ஆகியோரை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.