
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த கொழந்தையம்மாள் (36), தனது மகள் வைசாலிக்கு (17) கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த கொழந்தையம்மாள், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய வைசாலிக்கு, மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் (29) என்பவருடன் திருமணம் நடத்த முடிவு செய்தார்.
அதன்படி கடந்த மார்ச் 18ஆம் தேதி, கொழந்தையம்மாள் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இதனால் விரக்தியடைந்து வைசாலி அன்று மதியமே தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக பாலக்கோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, பெண் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகள் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து வைத்த கொழந்தையம்மாளும், மணமகனாக இருந்த தாமோதரனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.