
பீகார் மாநிலத்தில் நீராஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூர் செல்வதற்காக சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது இவருக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. பல்வலி என்றால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்றும், வயிற்று வலி என்று கூறினால் உடனே சிகிச்சை கிடைக்கும் என்று நினைத்தார். இதனால் தனக்கு கடும் வயிற்று வலி இருப்பதாக கூறி ரயிலில் புரண்டார். வலி தாங்க முடியாதது போல நடித்து அட்டகாசம் செய்தார்.
இதனால் பயணிகள் பரிதாபப்பட்டு அவருக்கு முதல் உதவி அளித்தனர். மேலும் அரக்கோணம் ரயில் நிலையம் மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரயில் நிலையத்தில் டாக்டர்கள், உதவியாளர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை என அனைவரும் காத்திருந்தனர். அதன் பின், ரயில் வந்ததும் நீராஜ்குமாரை வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு சிகிச்சை செய்ய முயன்றனர். அப்போது அவர் வயிற்றை காண்பிக்காமல் வாயை திறந்து பல் வலி என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், வயிற்று வலிக்கான மாத்திரையை தயார் நிலையில் வைத்திருந்த நிலையில், பல்வலி என்று கூறியதால் கடிந்து கொண்டனர். அதன் பின் அவருக்கு மாத்திரைகளும் வழங்கப்பட்டது. மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று அவரை எச்சரித்து அனுப்பினார். இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.