
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பல அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களில் பஞ்சாப் அணியில் அறிமுகமான ஷசாங்க் சிங் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவரை தற்போது 5.5 கோடிக்கு பஞ்சாப் அணி தக்கவைத்துள்ளது. கடந்த சீசனில் மற்றொரு வீரருக்கு பதிலாக தவறாக பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டவர் தான் ஷசாங்க் சிங். தற்போது அதே அணியில் ரீடேன் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சீசனில் 14 போட்டிகளில் களமிறங்கி 354 ரன்கள் எடுத்து பலரது கவனத்தை ஈர்த்தார். அதனால் அவரை மீண்டும் பஞ்சாப் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல்-லில் தான் விளையாடியதை குறித்தும், மகேந்திர தோனி அவருக்கு கொடுத்த அறிவுரை குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பினிஷராக இருப்பது குறித்து நிறைய கேள்விகளை அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நீ விளையாடும் 10 போட்டிகளில் உனது அணியை 3 முறை வெற்றி பெற வைத்தால், உலகின் 5 முதல் 10 சிறந்த பினிஷர்களின் நீயும் ஒருவராய் இருப்பாய் என்று கூறினார்.
இது எனக்கு மிகவும் தன்னம்பிக்கையை கொடுத்தது. அதாவது நாம் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் நம்மளால் வெற்றி பெற முடியாது. அதே வேளை அணிக்காக கடைசி நேரத்தில் போட்டியை முடிக்கும் போது எவ்வளவு நிதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், எவ்வாறு சூழலை அணுக வேண்டும் என்று அவர் கூறியதை எல்லாம் நான் நினைவில் வைத்துக் கொண்டுதான் பயிற்சியும் மேற்கொண்டேன். அந்த வகையில் கடந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.