
ராணிப்பேட்டை மாவட்டம் துரைசாமி நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் அமைக்க முடிவு செய்த நிலையில் ஜோசப் என்பவருடைய வீட்டை வாடகைக்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு இணையத்தில் பதிவு செய்திருந்தார். இதற்காக உதவி செயற்பொறியாளர் புனிதா என்பவர், தன்னுடைய உதவியாளர்களுடன் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது மின் இணைப்பை மாற்ற வேண்டும் என்றால் 1 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று புனிதா சரவணனிடம் கேட்டார். அதற்கு சரவணன் முதலில் ரூ. 50,000 பணத்தை முன்பணமாக கொடுத்தார். ஆனால் மீதி பணத்தை கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் புனிதா அவரை தரக்குறைவாக பேசி பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த சரவணன் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ. 25 ஆயிரம் பணத்தை சரவணனிடம் கொடுத்து புனிதாவிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி சரவணன் புனிதாவிடம் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் புனிதா உட்பட 3 பேரை லஞ்ச ஒழிப்புத் காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.