
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டாக்களின் திலக் நகரில் வசித்து வருபவர் துபாக்குலா ராமா ஆஞ்சநேயலு. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் இளையவர் துப்பாக்குலா பாரதி(20). 4 மகள்களில் இவர்தான் கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார். இந்த நிலையில் துபாக்குலா பாரதி கல்லூரியில் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீட்டிற்கு தெரிய வந்தபோது அவரது தந்தை ராமா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் மகளுக்கும், தந்தைக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த கடந்த வாரம் வழக்கம்போல பாரதி தனது தந்தையிடம் தான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாக உறுதியாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தந்தை ராமா கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது மகள் பாரதியை திக்கா சாமி தர்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் தனது மகளின் உடலை ஹன்றி-நீஹா கால்வாயின் அருகே கொண்டு சென்று கொடூரமான முறையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
இதனை அடுத்து நேற்று மார்ச் 5ஆம் தேதி காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று தனது மகள் காதலித்ததால் ஆணவக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் எரிக்கப்பட்ட உடலின் அருகே உள்ள ஆதாரங்களை சேகரித்தனர். பின்னர் தந்தை ராமா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிப்பதால் தனது சொந்த மகளை கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.