
தேனி மாவட்டம் எஸ்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கமலம்(83) வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் சுயநினைவுவை இழந்தார். பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவு அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு கமலத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கமலம் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க நகை காணாமல் போனது. இதுகுறித்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண் கமலத்தின் தங்க செயினை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் வளையப்பட்டியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நந்தினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.