மத்தியப்பிரதேசம் குவாலியரில் ஏப்ரல் 1 ஆம் தேதி, 34 வயதான திருமணமான பெண் ஒருவரை மலைப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் மாவட்டத்தில் உள்ள கிற்வாய் காவல் நிலைய எல்லையில் நடந்த இந்த சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

மார்க்கெட்டிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை, வழியில் சந்தித்த அவரது பக்கத்து வீடுகாரரான ரூப் சிங் ஜடவ் என்பவர், மலைப்பாதையை நோக்கி அழைத்து சென்று கொலை மிரட்டலுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக தனது குடும்பத்தினரிடம் இது குறித்து கூறிய அவர், நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கிற்வாய் காவல் நிலையத்தில் அதிகாரபூர்வமாக புகார் அளித்தார். அந்த புகாரை பெற்ற போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ததுடன், குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவாலியர் தலைமையகம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிரஞ்சன் சர்மா கூறியதாவது, குற்றவாளி தற்போது காவலில் உள்ளதாகவும், சட்டப்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். குற்றவாளி விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் அவர் கூறினார்.