தமிழ் சினிமாவில் புதிய அலை எழுப்பியுள்ள ‘லப்பர் பந்து’ திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தனது படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் சினிமா தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் , படத்தில் சாதி குறித்து பேசியிருப்பதாக கூறப்படுவதற்கு விளக்கம் அளித்த இயக்குநர், “நாம் சாதியை குறித்து பேசினால் நாம் சாதி வெறியன் கிடையாது. மக்களிடம் இப்படம் வரவேற்பை பெற முக்கிய காரணம் பொழுதுபோக்கு அம்சம் தான்” என்று கூறியுள்ளார். மேலும், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் சாதி அரசியலை சரியாக பேசுவதாகவும், தான் அந்த அளவுக்கு அதை ஆழமாக அறிந்தவர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் , புதிய இயக்குநர்கள் சாதி அரசியலை மையமாக வைத்து எழுதுவது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறிய தமிழரசன், தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை எழுதும் விதம் குறித்தும் பேசுகையில். “என் படங்களில் ஹீரோயின்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதவில்லை. அவர்கள் நான் நினைத்தபடி இவ்வாறு இருக்க வேண்டும் என்று எழுதினேன். மேலும் தினேஷின் கதாபாத்திரம் எங்கள் ஊரில் உள்ள ஒருவரின் குணாதிசயங்களை கொண்டு கொஞ்சம் விரிவுபடுத்தி எழுதினேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சாதி அரசியல் மற்றும் பெண் கதாபாத்திரங்கள் போன்ற விஷயங்கள் தற்போது வெகுவாக பேசப்படும் நிலையில், லப்பர் பந்து இயக்குநரின் இந்த கருத்துக்கள் மேலும் பல விவாதங்களை ஏற்படுத்தும் என சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.